லோடு வேனில் கடத்திய 2,025 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவில்பட்டியில் லோடு வேனில் கடத்தி செல்லப்பட்ட 2,025 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வேனில் இருந்து தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update: 2025-07-14 08:32 GMT
கோவில்பட்டியில் லோடு வேனில் கடத்தி செல்லப்பட்ட 2,025 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வேனில் இருந்து தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் சிக்னலில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் வேகமாக வந்த லோடு வேனை போக்குவரத்து போலீஸ்காரர் அருண் விக்னேஷ் தடுத்து நிறுத்தினார். அந்த வேனை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு, அதை ஓட்டி வந்த வாலிபர் தப்பி ஓடினார். அவரை போலீஸ்காரர் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினார். இதில், அவர் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் மகாராஜன்(25) என்று தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறியதால், வேனில் போலீஸ்காரர் சோதனையிட்டார். அப்போது அந்த வேனில் தலா 45 கிலோ எடை கொண்ட 45 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்து மகாராஜன் தப்பி ஓடினார். போலீஸ்காரர் துரத்தி சென்றும், அவர் வேகமாக இருளில் ஓடி தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த போலீஸ்காரர், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, லோடு வேனையும், 2025 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த போலீசார், லோடுவேனுடன், ரேஷன் அரிசி மூட்டைகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மகாராஜனை தேடிவருகின்றனர்.

Similar News