சிவகங்கையில் ஜன. 21, 22-ல் முதல்வர் சுற்றுப்பயணம்
சிவகங்கை மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஜன.21, 22 ஆகிய நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது 40,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார். சிவகங்கையில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன. 21, 22 ஆகிய தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார். ஜன. 21-ம் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினரால் கட்டப்பட்ட ‘வளர் தமிழ்' நூலகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். ஜன. 22-ம் தேதி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்று கூறினார். முன்னதாக முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் பார்வையிட்டனர்.