காஞ்சியில் விதிமீறிய 220 வாகனங்களுக்கு அபராதம்
காஞ்சியில் விதிமீறிய 220 வாகனங்களுக்கு ஒரே மாதத்தில் ரூ.15.70 லட்சம் அபராதம்;
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில், அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச் சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்ப்பாய் மூடாத வாகனங்கள் என, விதிமீறி இயக்கிய 220 வாகனங்கள் கண்டறியப்பட்டன. இந்த வாகனங்களுக்கு வரி, அபராதம் வசூலித்தும், வாகனத்தை சிறை பிடித்து அபராதம் வசூலித்தது என, மொத்தமாக 15 லட்சத்து, 70,810 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. விதியை மீறும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஓட்டுநர் உரிமம், தகுதிச் சான்று, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனம், பயணியர் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.