பேராவூரணி வாரச்சந்தை ஏற்கனவே இருந்த  இடத்திலேயே 24 ஆயிரம் சதுர அடியில் அமைக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு

ஆலோசனைக் கூட்டம்;

Update: 2025-03-20 11:56 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், ஏற்கனவே வாரச்சந்தை இயங்கி வரும் அதே இடத்திலேயே அனைத்து வசதிகளுடன், 24 ஆயிரம் சதுர அடியில் அமைக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  பேராவூரணி வாரச்சந்தை சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அறந்தாங்கி சாலையில் நீலகண்டப் பிள்ளையார் கோயில் அருகே இயங்கி வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் காய்கறிகள் கொண்டு வருவதால், விலை குறைவாக இருக்கும் என்பதால்  பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச் சந்தைக்கு வந்து  தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.  அருகிலேயே புதிய பேருந்து நிலையம்  உள்ளதால் பேருந்தை விட்டு இறங்கியவுடன் சந்தைக்கு செல்ல வசதியாக இருப்பதால் அதிக அளவில் சந்தைக்கு பெண்கள் கூட்டமாக வருவார்கள்.  இந்நிலையில், நீண்ட காலமாக பழைய ஆஸ்பெட்டாஸ் கட்டடத்தில்  இருந்து வரும் சந்தையை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வசதியாக மேம்பாடு செய்துதர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் புதிய சந்தை அமைக்க ரூ.403 லட்சம் மதிப்பீட்டில் டென்டர் பெறப்பட்டு, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகே சந்தை வேலை முடிவடையும் வரை தற்காலிக செட் அமைக்கப்பட்டு, கடந்த மாதம் பழைய ஆஸ்பெட்டாஸ் கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி துவங்கியது.  அப்போது, வாரச்சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகள், தற்போது உள்ள இடம் சிறியதாக உள்ளதால், இந்த இடத்தில் சுவர் வைத்து கடைகள் கட்டினால், இடம் மேலும் குறுகி, வியாபாரிகள் கடை அமைப்பதற்கும், பொதுமக்கள் உள்ளே வந்து பொருட்கள் வாங்குவதற்கும் இடையூறாக இருக்கும் என்பதால், கடைகள் கட்டாமல் பெரிய அளவில் செட்டு அமைத்து, இதர அடிப்படை வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் ஆகியோர் நேரடியாக வந்து சந்தையை ஆய்வு செய்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு  நன்மை அளிக்கும் வகையில் அமைத்துக் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.  இதன் அடிப்படையில், பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் செயல் அலுவலர் ராஜா தலைமையில், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல் மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.  இக்கூட்டத்தில் நகர வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், அதிமுக நகரச்செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், காய்கறி மொத்த வியாபாரி வி.எஸ்.எம்.மூர்த்தி, சந்தை ஏலதாரர் வேதபாக்கியம், முன்னாள் கவுன்சிலர் டி.கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினார்கள். இறுதியாக தற்போது சந்தை இயங்கிவரும் இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய திட்ட மதிப்பீட்டில் நான்கு மாத காலத்திற்குள் 24 ஆயிரம் சதுர அடியில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்து, குடிநீர் வசதி, மூன்று பக்க நுழைவாயில்களுடன் மின்விளக்கு வசதி, கழிப்பிட வசதியுடன் கூடிய இரும்பு செட் அமைப்பது எனவும், அதுவரை கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள  தற்காலிக செட்டை மேலும் சிறிது விரிவுபடுத்தி சந்தை நடத்துவது எனவும்  தீர்மானிக்கப்பட்டது.  கூட்டத்தில் பேரூராட்சி பொறியாளர்கள் ராமலிங்கம், இளையராஜா, மற்றும் அப்துல் ரகுமான், கான் முகமது உள்ளிட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News