சேலம் மாவட்டம் முழுவதும் 240 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்
அமைச்சர் ராஜேந்திரன் தகவல்;
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவர் குபேந்திரன் வரவேற்றார். அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- மாவட்டத்தில் 6¾ லட்சம் கால்நடைகள் உள்ளன. 149 கால்நடை மருந்தகம், 7 நடமாடும் மருந்தகம், 7 கால்நடை மருத்துவமனை, ஒரு கால்நடை பன்முக மருத்துவமனை உள்ளன. கால்நடைகளின் நோய் தடுப்பு பணிகளுக்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 20 முகாம்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 240 சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். கால்நடை வளர்ப்போரின் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை வழங்கும் வகையில் மாவட்டத்தில் 15 நடமாடும் வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. தற்போது கெங்கவல்லி வட்டாரத்திற்கு என மேலும் ஒரு நடமாடும் வாகனம் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் பொருளாதார ரீதியாக பயன்பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் பாலின பாகுபாடு செய்யப்பட்ட உறைவிந்து குச்சிகள் மூலம் கருவூட்டல் செய்து கிடேரி கன்றுகள் மட்டும் ஈனும் திட்டமும் தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் அதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.