அக்டோபர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை வணிக நிறுவனங்களுக்கு இரவு 1 மணி வரை செயல்பட அனுமதி வேண்டும் !-மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த வணிகர் சங்கத்தினர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் இரவு 1 மணி வரை செயல்படவும், பேருந்து நிலைய கடைகள் 24 மணி நேரமும் செயல்படவும் அனுமதி வழங்க வேண்டுகிறோம்.

Update: 2024-10-25 13:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது.... வணிகர்களாகிய நாங்கள் GST, வணிக உரிமம் ஆகியவற்றை முறையாக பெற்று தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் வரி, குப்பை வரி என பல்வேறு வரிகள் செலுத்தி தொழில் செய்து வருகிறோம். நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஆண்டு முழுக்க வேலை வாய்ப்பு வழங்கி வருகிறோம்.ஆனால் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சிலர் மாவட்ட நிர்வாகத்தின் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து, தற்காலிக கடைகள் அமைத்து ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வணிகர்களின் பண்டிகை கால விற்பனை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், இவ்வாறு மண்டபங்களில் தற்காலிக கடைகள் அமைக்க தடைவிதித்து, வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டுகிறோம். மேலும் வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக தற்காலிக தரைக்கடைகள் அமைப்பதற்கு தடைவிதித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கென தனி இடம் ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் சாலை ஓரங்களில் குடைகள் அமைத்து சிம் கார்டு விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் இரவு 1 மணி வரை செயல்படவும், பேருந்து நிலைய கடைகள் 24 மணி நேரமும் செயல்படவும் அனுமதி வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Similar News