கோழிகளை திருடியதாக 3 பேர்கள் மீது போலீஸாா் வழக்கு பதிவு!

சாத்தான்குளம் அருகே கோழிப்பண்ணையில் புகுந்து கோழிகளைத் திருடியதாக 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Update: 2024-09-04 05:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் ஆா்.சி. கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால் மகன் சந்திரபோஸ் (42). இவா் நெடுங்குளம்- சாத்தான்குளம் சாலையில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். இதில் 400 கோழிகள் வைத்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 150 கோழிகள் திருட்டு போனது. இதேபோல் ஜூலை மாதம் 150 கோழிகள் திருட்டு போனது. இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், கடந்த மாதம் 25ஆம்தேதி மீண்டும் 25 கோழிகள் திருட்டு போனது. இதனையடுத்து அங்கு வைத்திருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்த்தபோது, ஒரு பைக்கில் வந்த 3 போ் சாக்கு பையில் கோழிகளை திருடிச் செல்வது தெரியவந்தது. புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன் விசாரணை நடத்தியதில், கோழிகளை வேலன்புதுக்குளத்தைச் சோ்ந்த சப்பாணிமுத்து உள்ளிட்ட 3 போ் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. அவா்கள் மீது வழக்கு பதிந்து, போலீஸாா் தேடி வருகின்றனா்.

Similar News