ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு: சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து மனு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் இன்று (டிச.30) சந்தித்துப் பேசினார்.
ஆளுநருடனான சந்திப்பின் போது விஜய்யுடன் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் இருந்தனர். ஆளுநரிடம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட மூன்று பக்கங்களைக் கொண்ட அறிக்கையை விஜய் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: இன்று (டிச.30) தவெக தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும், என தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளை கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாக கூறினார் என்று தெரிவித்துள்ளார்.