லஞ்ச வழக்கில் தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை!

தராசு முத்திரையிட உரிமம் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Update: 2025-01-08 06:47 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேற்கு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (66). இவர் தராசு முத்திரையிடுவதற்கான உரிமம் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பித்தார். இதற்காக கடந்த 20.3.2013 அன்று திருச்செந்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் காளிராஜை சந்தித்தார். அப்போது காளிராஜ் தராசு முத்திரையிடுவதற்கான உரிமம் வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு முத்துராமலிங்கத்திடம் கேட்டார். அதற்கு அவர் மறுநாள் பணத்தை கொண்டு வந்து தருவதாக கூறி சென்று விட்டார். எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துராமலிங்கம், இதுகுறித்து தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், மறுநாள் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை முத்துராமலிங்கம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் காளிராஜிடம் சென்று கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக காளிராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியில் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வசித்குமார், குற்றம் சாட்டப்பட்ட காளிராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜென்சி ஆஜரானார்.

Similar News