ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு காலணியை சுத்தம் செய்த பேராசிரியர்
ஸ்ரீபெரும்புதுார் வந்த பேராசிரியர் செல்வகுமார், ராமானுஜர் கோவில் அருகே அமர்ந்து, கோவிலுக்கு வந்த பக்தர்களின் காலணியை சுத்தம் செய்து நிதி திரட்டினார்
சென்னை, பாடியநல்லுாரைச் சேர்ந்தவர் செல்வகுமார், 45; தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர். இவர், 21 ஆண்டுகளாக ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளின் கல்வி உதவிக்காக போராடி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வாரந்தோறும் விடுமுறை நாட்களில், மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில், 'நான் உங்கள் செருப்பை துடைக்கிறேன்; நீங்கள் அவர்களின் கண்ணீரை துடையுங்கள்' என்ற வாசகத்துடன் தரையில் அமர்ந்து, மக்களின் காலணிகளை சுத்தம் செய்து வருகிறார். இதன் வாயிலாக பெறப்படும் நிதியுதவியை வைத்து, மாணவர்களின் கல்வி, உணவிற்காக செலவிட்டு வருகிறார். அத்துடன், அவர் எழுதிய 60 புத்தகங்களை விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் பணத்தையும் மாணவர்களுக்கு செலவிட்டு வருகிறார். ஏழை மாணவர்கள் கல்விக்கு நிதி திரட்டுவதற்காக, நேற்று காலை ஸ்ரீபெரும்புதுார் வந்த பேராசிரியர் செல்வகுமார், ராமானுஜர் கோவில் அருகே அமர்ந்து, கோவிலுக்கு வந்த பக்தர்களின் காலணியை சுத்தம் செய்து நிதி திரட்டினார்.