அனுமதியின்றி கட்டப்பட்ட 3 மாடி கட்டிடத்திற்கு சீல்
அனுமதியின்றி கட்டப்பட்ட 3 மாடி கட்டிடத்திற்கு சீல்;
மதுரவாயலில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 3 மாடி கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11வது மண்டலத்திற்கு உட்பட்ட மதுரவாயலில் பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் மூன்று மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் அழகு நிலையமும், பிரியாணி கடையும் இயங்கி வந்தன. இந்தக் கட்டிடம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் விதிகளை மீறி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தனிநபர் ஒருவர் 2022ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், அந்தக் கட்டிடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்தனர். பின்னர் கட்டிடத்தின் உரிமையாளர் அந்த கட்டிடத்தை சீரமைக்க மூன்று மாத காலம் அவகாசம் கோரி இருந்தார். இதனால் அவருக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் மூன்று மாதங்களை கடந்தும் இதுவரை அந்த கட்டிடம் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், அந்த கட்டிடத்திற்கு வளசரவாக்கம் மண்டலம் செயற்பொறியாளர் விஜயபாஸ்கர் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று நேற்று அதிரடியாக சீல் வைத்தனர்.