சேலத்தில் பாலினம் குறித்து கண்டறிந்து கருக்கலைப்பு செய்த 3 தனியார் ஆஸ்பத்திரிகளை மூட உத்தரவு
அதிகாரிகள் நடவடிக்கை;
சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினம் குறித்து கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகளின் புகார்களின் பேரில், வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட அரசு பெண் டாக்டர் மற்றும் 7 நர்சுகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சோதனை நடத்தினர். இது குறித்து மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- பாலினம் கண்டறிந்து கூறியதாக வந்த புகாரின் பேரில், சேலத்தில் உள்ள சில ஆஸ்பத்திரிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சேலம் டவுன், பொன்னம்மாபேட்டை, பெரியபுத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் 3 தனியார் ஆஸ்பத்திரிகளில் பாலினம் கண்டறிந்து கூறியதுடன் சில பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3 ஆஸ்பத்திரிகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் பெரியபுத்தூரில் செயல்பட்டு வந்த ஆஸ்பத்திரி அனுமதி பெறாமல் இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.