கண்ணங்குடி யூனியனில் ஊழல் - 3 பேர் மீது வழக்கு
கண்ணங்குடி யூனியனில் ஊழல் புகார் எழுந்த நிலையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது;
சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி பஞ்சாயத்து யூனியனில் கடந்த 2021ஆம் ஆண்டில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய பழனியம்மாள், அதே யூனியனில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய சுப்பிரமணியன் மற்றும் உதவிப் பொறியாளராக பணியாற்றிய திருமாறன் ஆகியோர் மீது ரூ.6,99,715/- அரசுத் தொகையை போலி பில்கள் மூலம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. செப்டம்பர் 2021 முதல் நவம்பர் 2021 வரையிலான காலத்தில், உள்ளாட்சி அமைப்பு தற்செயல் தேர்தலுக்காக ஒப்படைக்கப்பட்ட நிதியை, வாக்குச் சாவடிகளில் தடுப்புகள் அமைத்தல், விளக்குகள், மின்விசிறிகள் பொருத்துதல், உணவுப்பொருட்கள் வழங்கல், சாமியானா அமைத்தல், வாகன ஏற்பாடுகள், ஜெனரேட்டர் சேவை, சுத்தம் செய்யும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கியதாக கூறி போலி பில்கள் மூலம் கையாடியதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிவகங்கை லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். தற்போது, பழனியம்மாள் மீண்டும் கண்ணங்குடி யூனியனில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சுப்பிரமணியன் தேவகோட்டை யூனியனில் அதே பதவியில் உள்ளார். திருமாறன் தற்போது தற்காலிக பணிநீக்கத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது