விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகியை வழிமறித்து தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு
குற்றச்செய்தி;
தஞ்சை அருகே வல்லத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகியை வழிமறித்து தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை அருகே வல்லம் ஹைஸ்கூல் சாலையை சேர்ந்தவர் சங்கர்(42). விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தஞ்சை மாவட்ட ஒன்றிய துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சங்கர் தன்னுடைய பைக்கில் வல்லம் - தஞ்சை சாலையில் உள்ள ஒரு கடைக்கு பெயிண்ட் வாங்க சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரில் இருந்து இறங்கிய வல்லத்தை சேர்ந்த மதியழகன், அவருடைய மகன்கள் பார்த்திபன், திருமாவளவன் ஆகிய 3 பேரும் சங்கரின் பைக்கை வழிமறித்து நிறுத்தி உள்ளனர். சங்கர் பைக்கை நிறுத்திய உடன் மதியழகன் உட்பட 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். சுதாரித்துக் கொண்டு சங்கர் அலறிக் கொண்டே அங்கிருந்து தப்பியோடி உள்ளார். சங்கரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் மதியழகன் உட்பட 3 பேரும் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் வல்லம இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மதியழகன் உட்பட மூணு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.