சேலம் மாவட்டம் முழுவதும் 3-வது நாளாக விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
மூக்கன் ஏரியில் 1300 சிலைகள் கரைக்கப்பட்டன;
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகர் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து சிலைகளுக்கு வழிபாடு செய்து பொதுமக்கள் வழிபட்டனர். இதேபோல் இந்து முன்னணி சார்பில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் மற்றும் பல்வேறு இடங்களில் மொத்தம் 75 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து 3 நாட்கள் வழிபாட்டிற்கு பிறகு நேற்று விநாயகர் சிலைகள் சரக்கு வேன் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அருகில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் கன்னங்குறிச்சி வழியாக முக்கனேரியை அடைந்தது. பெரிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக 2 கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. சில சிலைகள் பரிசல் மூலம் ஏரியின் நடு பகுதிக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டன. மாநகரில் நேற்று வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய விநாயகர் சிலைகள் உள்பட 1,300 சிலைகள் கரைக்கப்பட்டன.