சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகில் மர்மமான முறையில் இறந்த கிடந்த 3 வயது சிறுவன்

போலீசார் விசாரணை;

Update: 2025-09-01 09:23 GMT
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டுக்கு அருகில் மின்சார டிரான்ஸ்பார்மருக்கு கீழே 3 வயது சிறுவன் ஒருவன் நேற்று காலையில் பேச்சு, மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்தான். இதனை கண்ட பொதுமக்கள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்த சிறுவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து ரெயிலில் யாராவது சிறுவனை கடத்தி வரும் போது வழியில் அவன் இறந்து போனதால் உடலை ஜங்ஷனில் வீசி சென்றார்களா? அல்லது உடல் நலக்குறைவால் சிறுவன் இறந்ததால், அடக்கம் செய்ய வழியின்றி வீசி சென்றார்களா? அல்லது சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டானா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் சிறுவனின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இதனால் கடத்திக்கொண்டு வந்தபோது இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News