கடவூர் ஊராட்சி ஒன்றியத்தோடு இணைக்க வலியுறுத்தி 3 கிராம பொதுமக்கள் நடத்த இருந்த உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு

கொசூர், மத்தகிரி,தொண்டமாங்கினம் மூன்று கிராம மக்கள் இன்று நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் வருகின்ற 27ஆம் தேதி நடத்துவதற்கு கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர்.;

Update: 2026-01-19 09:04 GMT
கரூர்மாவட்டம்,கடவூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கினம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த மூன்று ஊராட்சிகளும் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதேபோல் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த மூன்று ஊராட்சிகளின் பொதுமக்கள் கிருஷ்ணராயபுரம் சென்று வருவதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லை என்பதால், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கினம் ஆகிய மூன்று ஊராட்சிகளை கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டது. ஆனால் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்த மூன்று ஊராட்சிகளையும் பிரித்து, கடவூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் இணைக்காமல் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், பேருந்து வசதிகளே இல்லாமல் சென்று வரும் சூழல் இருந்து வருகிறது. இதனால் மூன்று ஊராட்சிகளையும் கடவூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இன்று 19.1.2026 திங்கட்கிழமை கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கனம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் கருப்பு கொடி கட்டி, கொசூர் கடைவீதியில் உண்ணாவிரதம் இருப்பது. சாலை மறியல் செய்வது என மூன்று கிராம ஊராட்சி பொதுமக்கள் முடிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் கோரிக்கை நிறைவேற்றுவதில் அதிகாரிகளுக்கு கால அவகாசம் அளிக்கும் நோக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தை வேறொரு தேதியில் மாற்றுவதற்கு மூன்று கிராம மக்கள் முடிவு செய்தனர். இதனை அடுத்து நேற்று கொசூர் குள்ளாயி அம்மன் கோவில் வளாகத்தில் மூன்று கிராம மக்கள் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மூன்று கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து, அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கும் நோக்கத்தில், உண்ணாவிரதம் இருக்கும் தேதியினை வருகின்ற 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடத்துவதற்கு ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அவர்கள் நோட்டீசில் தெரியப்படுத்தி இருப்பதாவது: கடவூர் ஊராட்சி ஒன்றியத்தோடு இணைப்பதற்கு கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி, இதற்காக மூன்று ஊராட்சிகளும் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு எங்கள் மூன்று ஊராட்சியை கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து விடுவிக்க, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அடுத்த கட்டமாக எங்கள் மூன்று ஊராட்சிகளையும் தங்களோடு இணைத்துக்கொள்ள கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அவர்களால் கடந்த 10.5.2022 அன்று எங்கள் 3 ஊராட்சிகளையும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து பிரித்து கடவூர் ஊராட்சி ஒன்றியத்தின் சேர்ப்பதற்கு உரிய கருத்துக்களை அனுப்பி வைக்குமாறு சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் அவர்களுக்கு கடிதம் எழுதினார். அதன் பிறகு இயக்குனருக்கும் அதிகாரிகளுக்கும் மூன்று ஊராட்சிகள் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் தனிப்பட்ட முறையில் பலமுறை தொடர்ந்து 15 ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்தும் எங்கள் நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்க்காததை கண்டித்து அனைத்து கட்சியினரும் பொதுமக்களோடு இணைந்து மாபெரும் சாலை மறியல், உண்ணாவிரதம் மற்றும் மூன்று ஊராட்சிகளில் உள்ள 4840 வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுதல் போராட்டமும் நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எந்த அரசியல் கட்சிகளும் தேர்தல் சம்பந்தமான எந்த ஒரு உள்கட்சி தேர்தல் பணிகளும் எங்கள் மூன்று ஊராட்சிகளில் உள்ள அனைத்து கட்சியினரும் ஈடுபடவும் போவதில்லை என அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளனர்.

Similar News