கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு
திருப்பூர் சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவர் ஆலயா என்ற பெயரில் சாய ஆலை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிவறையின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய நேற்று தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சின்னசாமி என்பவர் நான்கு பேரை அழைத்துக் கொண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றுள்ளார். இதில் தொட்டியில் இறங்கியவர்களுக்கு விஷவாயு தாக்கியதில் சரவணன் வேணுகோபால் ஹரி கிருஷ்ணன் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர் மேலும் சின்னசாமி முத்துக்குமார் என 5 பேரும் விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேரையும் சாய நிறுவனம் சார்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சரவணன் மற்றும் வேணு கோபால் என இரண்டு பேர் உயிரே இறந்தனர் இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரி கிருஷ்ணனும் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று பேர் விஷ வாயுத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாய ஆலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் ஆலை உரிமையாளர் நவீன் பொது மேலாளர் தனபால், சூப்பர்வைசர் பாலசுப்பிரமணியம், விஷவாயு தாக்கி சிகிச்சை பெற்று வரும் லாரி ஓட்டுநர் சின்னசாமி உள்ளிட்ட 4 பேர் மீது கவனக்குறைவாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்துதல், மனித கழிவுகளை மனிதர்களை வைத்தே அகற்றுதல், மனித கழிவுகளை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை வைத்து அள்ளியதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு தலித் அமைப்புகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உரிமையாளரை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உயிரிழந்த 3 பேரின் உறவினர்கள் ஏராளமானோர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் சாய ஆலை உரிமையாளர் தரப்பு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் இழப்பீடு வழங்க சாய ஆலை தரப்பினர் ஒப்புதல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 3 பேரின் வாரிசு தாரர்களுக்கு சாய ஆலையிடமிருந்து பெற்ற 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் வழங்கினார். இதனை தொடர்ந்து உயிரிழ்ந்தவர்கள் உடலை அவர்களது குடும்பத்தினர் பெற்றுச் சென்றனர். மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 6 லட்சம் ரூபாய் முதற்கட்டமாக வழங்க வேண்டும் என தலித் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.