தஞ்சாவூரில், டிட்டோஜாக் அமைப்பினர் சாலை மறியல்: 303 பேர் கைது

கைது;

Update: 2025-07-17 15:22 GMT
தேர்தலில் அளித்த வாக்குறுதிப் படி பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூர் காந்திஜி சாலை ஆற்றுப் பாலம் அருகில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோஜாக்) வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.  இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதிய குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு, ஊதிய முரண்பாடுகளை நீக்கி, ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 2006, ஜனவரி 1 முதல் மீண்டும் வழங்க வேண்டும்.  தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்களின் நலன் கருதி காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யக்கூடாது" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இரா.விஜயகுமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ந. நாகராஜன், தமிழக ஆசிரியர் கூட்டணி ம. ரகு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொ.முத்துவேல், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி த.முருகானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்போராட்டத்தை உயர் மட்டக்குழு உறுப்பினர் எழிலரசன் தொடங்கி வைத்தார். டிட்டோஜாக் அமைப்பின் நிர்வாகிகள் ப.தேன்மொழி, மா.நாகராஜன், இரா.மணிவண்ணன், தி.சிவசங்கர், வி.சசீனுவாசன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக 303 பேரை காவல் துறையினர் கைது செய்து, வடக்கு வீதியிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். மீண்டும் மறியல்: ஆனால், பிற்பகல் 3 மணி கடந்தும் மதிய உணவு வழங்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வடக்கு வீதியில் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உணவு பொட்டலங்கள் வருவதாக காவல் துறையினர் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், வடக்கு வீதியில் ஏறத்தாழ 5 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News