வெள்ளகோவில் அருகே விவசாயிகளுக்கு வழங்கும் மானிய விலை யூரியா 3210 முட்டைகளில் 145 டன் பறிமுதல் - உரிமையாளர்கள் தலைமறைவு
காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கு வழங்கும் மானிய விலை யூரியா 3,210 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புது டெல்லியில் இருந்து மத்திய அரசின் உரக்கட்டுப்பாட்டு துணைச்செயலாளர் சத்திரம் மீனா தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.கே நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50) அத்தாம்பாளையத்தில் காட்டன் மில் நடத்தி வருகிறார். மில் வளாகத்தில் உள்ள குடோனில் விவசாயத்திற்கு பயன்படும் மானிய விலை யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. புதுடில்லியிலிருந்து மத்திய அரசின் உரக்கட்டுப்பாட்டு துணைச் செயலாளர் சத்திரம் மீனா, கோவை வேளாண்மை துறை கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல், ஈரோடு வேளாண்மை துறை உதவி இயக்குனர் சரஸ்வதி, திருப்பூர் வேளாண் தர கட்டுப்பாட்டு அலுவலர் சீதா, வெள்ளகோவில் வேளாண் அலுவலர் சுவாதிகா ஆகியோர் காவல் துறையினருடன் அந்த குடோனுக்கு சென்றனர். அங்கு குடோன் பூட்டப்பட்டு இருந்தது இதை அடுத்து பூட்டை உடைத்து ஆய்வு செய்தனர். அப்போது குடோனில் 45 கிலோ எடை கொண்ட 3,210 மானிய விலை யூரியா மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதன் உரிமையாளர்கள் ரமேஷ் அவருடைய தம்பி தாமரைக்கண்ணன் இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் யூரியாக்களை ஒரு மூட்டைக்கு ரூ.256.50 வாங்கி அவற்றை தங்களுடைய சொந்த லாரிகளில் கொண்டு வந்து பின்னர் அவற்றை தலா 50 கிலோ அளவுக்கு வேறு நிறத்தில் உள்ள மூட்டைகளாக மாற்றி தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு ஒரு மூட்டை ரூ.1500 என்று விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதை அடுத்து இருவரும் தலைமறைவாகி விட்டனர். யூரியா மற்றும் மூட்டைகள் மற்றும் லாரி, வேன், கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், திருப்பூர் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து இரவு முழுவதும் ஆய்வு செய்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுக்கும் யூரியாக்கள் எப்படி இவர்களுக்கு கிடைத்தது. இவர்களின் பின்புலத்தில் யார் யார் உள்ளனர்? இவர்களுடன் அரசு அதிகாரிகள் தொடர்பில்உள்ளவர்கள் யார் ? எத்தனை ஆண்டு காலமாக இந்த விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசிடம் இருந்து விவசாயி ஒரு மூட்டை மானியமாக யூரியா பெறுவது என்றால் தோட்டத்தின் பத்திரம்,சிட்டா,அடங்கல்,ஆர்.எஸ்.ஆர், கூட்டுவரைபடம், கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் போன்ற பல்வேறு நடைமுறைகள் வழக்கத்தில் உள்ள போது இவர்களுக்கு மட்டும் எவ்வாறு இத்தனை மூட்டைகள் யூரியா தொடர்ந்து கிடைத்தது என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ளது.