கலைத்திட்டத்தில் 33 வகை கருத்து மூலங்களை உருவாக்கியதற்காக நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு தொழில்முறை உலக சாதனை விருது!
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் மு.செல்வத்திற்கு புதுச்சேரி, ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் மேலாண் பொறுப்பாட்சியர் முனைவர் வெங்கடேசன் உலக சாதனை விருதை வழங்கினார்;
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் மு.செல்வம் அவர்களுக்கு கலைத்திட்டத்தில் 33 வகையான கருத்து மூலங்களை நூலாகவும், ஒலி மற்றும் காணொளி வடிவில் உரைநடை, கற்பித்தல், பயிற்சி, மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி போன்ற தனிப்பிரிவுகளில் உருவாக்கியமைக்காக 'தொழில்முறையில் உலக சாதனைச் சான்றிதழை' புதுச்சேரி, ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் வழங்கியது. நிறுவன முதல்வர் மு.செல்வம் கடந்த 25 ஆண்டுகளில் கலைத்திட்டப் பகுதிகளின் வளர்ச்சிக்காகப் பள்ளிப் பாடநூல்கள்,செயற்பாட்டுப் புத்தகம், உயர்நிலைக் கற்றல் நூல்கள், மதிப்பீட்டிற்கான பயிற்றுவிப்பு நூல்கள், முதியோர் கல்விக்கான கையேடு, வளநூல்கள், கற்பித்தல் முறை நூல்கள், மின் பாடப்பொருள் உருவாக்க வழிகாட்டி நூல், ஆசிரியர் பயிற்சிக் கையேடுகள், குறிப்பிட்டப் பாடங்கள் மற்றும் மாவட்டத்திற்கான குறிப்பிட்ட கல்விக்கான கட்டகங்கள், தனி வரைவு நூல், செயலாய்வுச் சுருக்க நூல், கலந்துரையாடல் தொகுப்பு, திருத்தப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட நூல்கள், பல்துறை இலக்கியம் மற்றும் சான்று அடிப்படையிலான நூல்கள், வெவ்வேறு பணிகளின் தொகுப்பு நூல்கள் ஆவணப் பதிவுகள் மற்றும் செயல்திட்ட அறிக்கைகள் போன்ற தனிப்பெரும் வகைகளை உருவாக்கி உள்ளார்.கலைத்திட்ட கருத்து மூலங்கள் உருவாக்கத்தில் முனைவர் மு.செல்வம் நூலாசிரியர், தொகுப்பாசிரியர், உள்ளடக்க மேற்பார்வையாளர், முதன்மைத் தொகுப்பாளர், ஆவணப் படுத்துபவர், கருத்தாக்கங்களை உருவாக்குபவர் மற்றும் கட்டுரையாளர் போன்ற பணிநிலைகளில் செயலாற்றி உள்ளார்.மேற்கண்ட சாதனையைப் பாராட்டி நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் மு. செல்வத்திற்கு புதுச்சேரி, ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் மேலாண் பொறுப்பாட்சியர் முனைவர் சீ. வெங்கடேசன் உலக சாதனை விருதை வழங்கினார்.தொழில்முறை சூழலில் (Professional setting) உலக சாதனை என்பது தனிப்பட்ட பொழுதுபோக்கு சாதனைகளை விட மாறுபட்டவை என்றும், ஆதாரங்கள், நடுவர்வகளின் சான்றிதழ்களின் அடிப்படையில் இந்த தொழில்முறை சாதனை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இவ்விருதின் முக்கியத்துவம் குறித்து புதுச்சேரி, ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் தலைவர் சி.கலைவாணி கூறினார்.பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது பெற்ற நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் மு.செல்வம் அவர்களுக்கு பயிற்சி பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.