முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.3,819 கோடிக்கு 23 ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.;

Update: 2025-09-03 11:56 GMT
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். ஜெர்மனியில் நேற்று முன்தினம் ஸ்டாலின் தலைமையில் ‘டி என் ரைசிங் யுரோப்’ முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக, ‘டி என் ரைசிங் ஜெர்மனி’ முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் தமிழகத்தில் 9,070 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஜெர்மனியில் மொத்தம் 26 ஒப்பந்தங்களின் மூலம் ரூ.7,020 கோடி அளவுக்கு முதலீடு கிடைத்துள்ளது. இதனால் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பல முன்னணி நிறுவனங்கள் விரிவாக்கப் பணிகளுக்கான முதலீட்டுக்கு முன்வந்துள்ளன. இந்த மாநாட்டில் வென்சிஸ் எனர்ஜி (ரூ.1,068 கோடி), பிஏஎஸ்எஃப் (ரூ.300 கோடி), பெல்லா பிரீமியர் ஹேப்பி ஹைஜீன் (ரூ.300 கோடி), ஹெர் ரென்க்னெக்ட் இந்தியா (ரூ.250 கோடி), பல்ஸ் (ரூ.200 கோடி), விட்சென்மேன் இந்தியா (ரூ.200 கோடி) மற்றும் மாஷ் எனர்ஜி (ரூ.200 கோடி ) ஆகிய முக்கிய நிறுவனங்கள் முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. பிஎம்டபிள்யு நிறுவனத்தின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பின்போது, ஆட்டோ மொடிவ் மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் தமிழகத்தின் பங்கை எடுத்துரைத்து, பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் செயல்பாட்டை தமிழகத்தில் அதிகப்படுத்த வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். ஜெர்மனியின் இரட்டை தொழில் பயிற்சி மாதிரியை தமிழகம் கொண்டு வருவதற்காக நெக்ஸ்ட் மிட்டல்ஸ்டாண்ட் (ஆஸ் பில்டங்) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 120 மாணவர்களுடன் தொடங்கும் இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் 20,000 மாணவர்களாக உயரும். தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், பல முதலீட்டாளர்கள் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்களை சந்தித்தார். இந்நிகழ்வுகளில், அமைச்சர் டிஆர்பி.ராஜா, தொழில் துறைச் செயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News