ஆண்டிமடத்தில் லஞ்சம் பெற்ற இருவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை
ஆண்டிமடம் லஞ்சம் பெற்ற இருவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது;
அரியலூர், டிச.24- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் லஞ்ச வழக்கில் கைதான இருவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஒன்றிய பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் சங்கர். இவர், அப்போது நாகம்பந்தல் கிராமத்தில் முழு சுகாதார திட்டத்தின் கீழ் ராதாகிருஷ்ணன், திரிசங்கு ஆகியோர் கட்டிய கழிவறைக்கு அரசு வழங்கும் தொகை ரூ.12,000 வழங்க, லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராதாகிருஷ்ணன் மற்றும் திரிசங்கு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் அறிவுரைப்படி தலா ரூ.1,500 வீதம் ரூ.3,000 தொகையை அங்கு பணிபுரிந்த தற்காலிக பணியாளர் ரத்தினசிகாமணி வசம் வழங்கினர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புபோலீஸார், சங்கர் மற்றும் ரத்தினசிகாமணி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மணிமேகலை , லஞ்சம் பெற்ற சங்கர் மற்றும் ரத்தினசிகாமணி ஆகிய இருவருக்கும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7- ன் கீழ் தலா 3 ஆண்டுகள், பிரிவு 13(1)-ன் கீழ் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் முருகன் ஆஜராகினார்.