சென்னை: இளைஞரை காரில் கடத்தி பணம் கேட்ட 4 பேர் கைது

ரூ.5 லட்சம் பணம் கேட்டு இளைஞரை காரில் கடத்தி சென்று மிரட்டிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.;

Update: 2025-04-27 17:53 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா தேவி (31). இவர் கடந்த 23-ம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘எனது கணவர் மணி தாய்லாந்து நாட்டில் வேலை செய்துவிட்டு, கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர், மொரிஷியஸ் நாட்டுக்கு வேலைக்கு செல்ல கடந்த 23ம் தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு வந்தார். அப்போது, அவர் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு, சிலர் என்னை காரில் கடத்தி சென்று, விடுதி ஒன்றில் அடைத்து வைத்து என்னிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்தார். எனவே, கடத்தப் பட்ட எனது கணவரை மீட்டு தர வேண்டும்’ என புகாரில் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மணியை கடத்தி சென்றது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் (43), புதுக்கோட்டை யை சேர்ந்த டோம்னிக் (34), பவுல்ராஜ் (27), மதுரவாயலை சேர்ந்த முனியன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள லாட்ஜில் இருந்து மணியை மீட்ட போலீஸார், அவரை கடத்தி வந்த 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக, விஜயகுமார், டோம்னிக் ஆகியோரிடம் மணி பணம் வாங்கியதாகவும், ஆனால், உறுதியளித்தபடி, அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியதால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு, மணியை கடத்தி சென்று மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.

Similar News