சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நான்கு வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2025-07-22 14:16 GMT
இதுதொடர்பாக சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்ததாகவும், அதனைத் தேட தீவிர முயற்சி செய்தும், கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். அதனால் புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்த போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். புது பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், “அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து, நான்கு வாரங்களில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Similar News