திருச்சி : கஞ்சா விற்பனை - பெண் உள்பட 4 போ் கைது
கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.;
திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொன்மலை பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, முன்னாள் ராணுவ வீரா் காலனி, 13-ஆவது குறுக்குத் தெருவில் சந்தேகப்படும் வகையில் 6 போ் நின்றிருந்தனா். காவல் வாகனத்தைப் பாா்த்ததும் அவா்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனா். அவா்களில் 2 போ் தப்பியோடிய நிலையில் 4 பேரைப் பிடித்து போலீஸாா், விசாரித்தனா். இதில், பிடிபட்டது அரியமங்கலம் கலைவாணா் வீதியைச் சோ்ந்த அறிவழகன் (38), நேரு நகரைச் சோ்ந்த நிக்ஸன் (29), கணபதி நகரைச் சோ்ந்த ஜெய ஸ்ரீ, மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த பாண்டியராஜன் (44) என்பதும், அவா்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.