காங்கேயத்தில் வெறிநாய்கள் கடித்து 4 செம்மறி ஆடுகள் சாவு
காங்கேயத்தில் வெறிநாய்கள் கடித்து 4 செம்மறி ஆடுகள் சாவு இழப்பீடு வழங்க கோரிக்கை;
காங்கேயம் பழைய கோட்டை பகுதியை சேர்ந்தவர் சம்பத். விவசாயி. இவர், ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று இவர், பழையகோட்டை சாலையில் தனியார் பள்ளி அருகே உள்ள தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று மாலை 4 மணி அளவில் 2 வெறிநாய்கள் அந்த தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அங்கிருந்த 2 குட்டிகள் உள்பட 4 ஆடுகளை கடித்து குதறின. இதில் அந்த 4 ஆடுகளும் பரிதாபமாக இறந்து விட்டன. பின்னர் அந்த நாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டன. இதுகுறித்து அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் விவசாயிகள் வெறி நாய்களை கட்டுப்படுத்துவதோடு, இறந்து ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.