கொள்ளையர்கள் 4 பேர் கைது : 35 பவுன் நகை, கார் பறிமுதல் - பரபரப்பு தகவல்!
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கப்பல் மாலுமி வீடு உள்ளிட்ட இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து திருடிய நான்கு பேர் கைது 35 பவுன் தங்க நகைகள் ரூபாய் 20,000 ரொக்கம் கார் பறிமுதல்;
தூத்துக்குடியில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 4பேரை போலீசார் கைது செய்தனர். 35 பவுன் தங்க நகைகள், ரூ.20,000 ரொக்கம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி சிலுவையார் கெபி தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் கில்பர்ட் செல்லையன் (73) என்பவர் கடந்த 08.06.2025 அன்று தனது மனைவியுடன் திருவனந்தபுரம் ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த 32 ½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 24,500/- பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கில்பர்ட் செல்லையன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் உட்பட காவல்துறையினர் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி மினிசகாயபுரம் பகுதியைச் சேர்ந்த டோமினிக் மகன் மரிய அந்தோணி ஆக்னல் (33), ராஜூவ் நகரை சேர்ந்த ரவி மகன் கண்ணன் (22), பீச்ரோடு பகுதியைச் சேர்ந்த கடல் ராஜா மகன் அரவிந்த் (22) மற்றும் கோவில்பட்டி குருவிகுளம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (22) ஆகியோர் சேர்ந்து கில்பர்ட் செல்லையன் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இதேபோன்று கடந்த 19.04.2025 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்வென்ட் ரோடு பகுதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 14 ¾ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40,000/- பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டு வழக்குகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.8,75,000 மதிப்புள்ள 35 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.