பெங்களூரில் இருந்து கரூருக்கு சேலம் வழியாக காரில் கடத்திய 400 கிலோ ஹான்ஸ் பறிமுதல்
கார் டிரைவர் கைது;
பெங்களூரில் இருந்து சேலம் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சேலம் சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, எஸ்ஐ மோகனா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி சூரமங்கலம் மாமாங்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். உள்ளே தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல் கணேஷ் போன்ற போதை புகையிலைப் பொருட்களை இருந்தது தெரியவந்தது. உடனடியாக காரை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று விசாரித்தனர். பெங்களூரு தசராஹள்ளி பகுதியைச் சேர்ந்த அமீர் பிரீத் சிங் என்ற டிரைவரை கைது செய்தனர். விசாரணையில் பெங்களூரில் இருந்து கரூருக்கு இவற்றை கொண்டு செல்வது தெரியவந்தது. இதை அடுத்து 400 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கார் உரிமையாளர் ராஜேஷ்குமார் மோகன் உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.