தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் ரூ. 45 கோடி இருப்பு : வாரியத் தலைவர் பேச்சு

நல வாரியம்;

Update: 2025-07-11 15:17 GMT
தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ரூ. 45 கோடி இருப்பு உள்ளது என்றார் வாரியத் தலைவர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தாட்கோ சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியது: தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி 2007 ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். இடையில் 10 ஆண்டுகளாக இந்த வாரியம் கிடப்பில் போடப்பட்டு, ஒரு பைசா கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மீண்டும் 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த வாரியத்துக்கு தனி அலுவலகத்தை உருவாக்கி, பணியாளர்களை நியமித்து, 37 மாவட்டங்களில் தூய்மைப் பணியாளர் அலுவலர்களைப் பணியமர்த்தினார். மேலும், இந்த வாரியத்துக்கு உயிர் கொடுத்தது மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும், மாநகராட்சிகளிலிருந்து நிதி ஆதாரத்தை உருவாக்கி, ஆண்டுக்கு ரூ. 5 கோடி இந்த வாரியத்துக்கு செலுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டார். இந்த வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ. 15 கோடி கிடைப்பதன் மூலம், தற்போது ரூ. 45 கோடி இருப்பு உள்ளது. இந்த வாரிய பணத்தை எக்காரணத்தைக் கொண்டும் வேறு பயன்பாட்டுக்கு எடுக்கக்கூடாது எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், தூய்மைப் பணியாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, இயற்கை, செயற்கை மரணம், உடல் உறுப்புகள் இழப்பு உள்ளிட்டவற்றுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. சில மாவட்டங்களில் மாநகராட்சிகளில் ஒப்பந்ததாரர்கள் வழங்கும் ஊதியம் போதுமானதாக இல்லை என்ற புகாரை தமிழக முதல்வரிடம் கோரிக்கையாக வைக்கப்படும். ஊரகப் பகுதிகளில் ஊதிய விகிதத்தை ரூ. 7 ஆயிரத்து 500 வழங்குவதற்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை பரிசீலனை செய்வதாக துணை முதல்வர் உறுதியளித்துள்ளார். மாவட்டங்களில் மாதத்துக்கு ஒரு நாள் தூய்மைப் பணியாளர் குறை தீர் கூட்டம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் பெயரில் தூய்மைப் பணியாளர்களுக்கு விருது வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆறுச்சாமி. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர்கள் சண். இராமநாதன் (தஞ்சாவூர்), க. சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், வாரியத் துணைத் தலைவர் கனிமொழி பத்மநாபன், உறுப்பினர்கள் க. குருநாதன், ந. சேகர், தஞ்சாவூர் கோட்டாட்சியர் செ. இலக்கியா, தாட்கோ மாவட்ட மேலாளர் வே. தியாகராஜன், துணை மேலாளர் பி. சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News