இருசக்கர வாகனம் என்பது நமக்கு பயன்படும் உபகரணமாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அதற்கு நாம் இரையாகக் கூடாது மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை.
இருசக்கர வாகனம் என்பது நமக்கு பயன்படும் உபகரணமாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அதற்கு நாம் இரையாகக் கூடாது - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவர்களுக்கு அறிவுரை.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-09-11 13:03 GMT
நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் சி.எம்.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை குறிப்பாக இளைய தலைமுறையினரான மாணவர்களிடம் கொண்டு செல்வதற்காக சாலை பாதுகாப்பு மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைக்கும் வகையில் 350 பள்ளிகள் மற்றும் 138 கல்லூரிகளில் சாலைப்பாதுகாப்பு மன்றங்கள் துவக்கப்பட்டு பொறுப்பு ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம், பேரணிகள் நடத்தப்பட்டு பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்கும், விபத்தினால் மரணங்கள் ஏற்படுவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டில் சாலை விபத்துக்களால் ஏற்பட்ட உயிர் இழப்பு 563 எண்ணிகையிலிருந்து 2024-ஆம் ஆண்டில் உயிர் இழப்பு எண்ணிக்க 520 ஆக குறைந்துள்ளது. மேற்கண்ட விபத்துகள் ஓட்டுநரின் தவறு காரணமாக நடந்துள்ளன, விபத்துகளுக்கு முக்கிய காரணங்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்பாடு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவையாகும். தமிழ்நாட்டில் 2023ல் ஏறத்தாழ 76,000 பேர் இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதில் 70% பேர் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் உயிரிழந்தனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. விதிமீறல்களைச் செய்யும் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படுகிறது. அதிக வேகம், அதிக பொருட்களை ஏற்றுதல், சரக்கு வண்டிகளில் அதிக நபர்களை ஏற்றுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கு மதிக்காமல் செல்லுதல், வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துதல், தலைக்கவசம் அணியாமல் செல்லுதல் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுவால் அடையாளம் காணப்பட்ட ஏழு குற்றங்களுக்காக, போக்குவரத்து விதி மீறலுக்காக 2024-ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 4,350 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. 2025-ஆம் ஆண்டு ஜுலை வரை 2,695 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.சாலை விபத்துக்கள் ஏற்படுவது பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதன் விளைவாகும். அதில், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது பாதிக்கப்பட்டவருக்கும் பாதசாரிகள், விலங்குகள் போன்றவற்றுக்கும் தீங்கு விளைவிக்கும் முக்கிய காரணமாகும். குறைந்த வயது உடையவர்கள் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் போன்ற குற்றங்களுக்காக சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். சாலை பாதுகாப்பு குறித்து மக்களை உணர வைக்க விபத்துக்குள்ளாகும் பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மேலும், வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் தகுதி குறித்த வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. வாகனங்களை இயக்கும் பொழுது, நாம் பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாமல், நமக்கு முன்னும் பின்னும் வருபவர்களுக்கும் பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் இயக்க வேண்டும். இக்கருத்தரங்கில் வழங்கப்படும் கருத்துகளை நீங்கள் பெறுவதோடு, உங்களை சார்ந்தவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். இருசக்கர வாகனம் என்பது நமக்கு பயன்படும் உபகரணமாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, அதற்கு நாம் இரையாகக் கூடாது. விபத்தில்லா நாமக்கல் மாவட்டத்தை உருவாக்குவதே நமது இலக்காகும். எனவே மாணவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் நாமக்கல் வட்டம், எர்ணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இ.எஸ்.முருகேசன் நாமக்கல் (தெற்கு), ம.பதுவைநாதன் (வடக்கு), கல்லூரி முதல்வர் கே.மகாதேவன், தலைவர் திர.சி.முத்துசாமி, துணைத் தலைவர் எம்.ஸ்ரீதர், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன், நீட்ஸ் ஓட்டுநர் அகாடமி நிறுவனர் நரசிம்மமணி உட்பட கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.