கன்னியாகுமரியில் நாளை போக்குவரத்து மாற்றம்!!
நாளை போக்குவரத்து மாற்றம்;
By : Nagercoil King 24x7
Update: 2025-10-01 03:40 GMT
கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவின் 10-ம் நாளான நாளை 2-ம்தேதி பரிவேட்டை திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் அன்று காலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நண்பகல் 12 மணி முதல் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் இருந்து தங்க நாற்கர சாலை வழியாக கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தை சென்றடைய வேண்டும். இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் பஸ்கள் இதே வழியாக நாகர்கோவில் செல்ல வேண்டும். பகவதி அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனம் மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்றடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.மேலும் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அம்மன் வாகனம் விவேகானந்தபுரம் சந்திப்பை கடக்கும் வரை நெல்லையில் இருந்து வரும் வாகனங்கள் காவல்கிணறு, அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரி விவேகானந்தபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வந்து திரும்பி செல்ல வேண்டும்.அம்மன் வாகனம் விவேகானந்தபுரத்தை கடந்து சென்ற பிறகு நெல்லையில் இருந்து அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரி வரும் வாகனங்கள் விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய சந்திப்பு வழியாக கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும். இந்த போக்குவரத்து மாற்றம் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும் பரிவேட்டை ஊர்வலம் நடப்பதையொட்டி அந்த பாதையில் எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த தகவலை கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.