வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகளை திருடிய 5 பேர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகளை திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-02-20 11:35 GMT
அரியலூர், பிப்.20- அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் திருடிய வழக்கில் 5 பேர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். உடையார்பாளையம் அருகேயுள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தா(68). கடந்த 14 ஆம் தேதி இவர், நூறுநாள் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 48 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.1லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடையார்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, ஜெயங்கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சீராளன் தலைமையிலான 3 தனிப் படையினர் விசாரணை மேற்கொண்டதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன்(27), மணிக்காளை(29), சிவகாசியைச் சேர்ந்த அழகுபாண்டி(24), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனசிங்(22), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(24) ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர், மேற்கண்ட 5 பேரையும் மதுரையில் புதன்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 37 பவுன் தங்க நகைகள், 430 கிராம் வெள்ளி பொருள்கள், ரூ.40,000 பணம், திருட்டுக்கு பயன்படுத்திய கார், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News