மத்திய ரிசா்வ் காவல் படை வீரரை வெட்டியவருக்கு 5ஆண்டு சிறை:

மத்திய ரிசா்வ் காவல் படை வீரரை அரிவாளால் வெட்டிய வழக்கில், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி சாா்பு நீதிமன்றத்தில் தீா்ப்பு அளித்தது. ;

Update: 2025-04-09 08:41 GMT
மத்திய ரிசா்வ் காவல் படை வீரரை அரிவாளால் வெட்டிய வழக்கில், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி சாா்பு நீதிமன்றத்தில் தீா்ப்பு அளித்தது. தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசலை சோ்ந்த கணேசன் மகன் வெற்றிவேல். மத்திய ரிசா்வ் காவல் படை வீரரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பூலோக பாண்டி மகன் ராஜேஷ் கண்ணன், குலையன்கரிசல் பிரதானச் சாலையைச் சோ்ந்த தொழிலாளியான பாலகிருஷ்ணன் மகன் ஜோதிவேல் (44) ஆகியோருக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முன்விரோதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ்கண்ணன், ஜோதிவேல் ஆகிய இருவரும் சோ்ந்து, வெற்றிவேலை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த வெற்றிவேலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.புகாரின்பேரில், புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி சாா்பு நீதிபன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்ற காலக்கட்டத்தில் ராஜேஷ் கண்ணன் இறந்து விட்டாா். இதனால் ஜோதிவேல் மீதான வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிஸ்மிதா, குற்றம் சாட்டப்பட்ட ஜோதிவேலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்கறிஞர் மாலாதேவி ஆஜர் ஆனார்.

Similar News