திருச்சி செந்தண்ணீர்புரம் பாலத்தில் 5 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்

திருச்சி செந்தண்ணீர்புரம் பாலத்தில் 5 அடி ஆழத்துக்கு ஏற்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்;

Update: 2025-07-05 04:18 GMT
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாநகராட்சி 49-வது வார் டுக்குட்பட்ட பொன்மலை ஜி.கார்னர் ரெயில்வே மேம்பாலத்தை அடுத்த சென்னை செல்லும் இணைப்புசாலையில் செந்தண்ணீர்புரம் பாலம் ஏறும் இடத்தில் நேற்று முன்தினம் மாலை சாலையின் நடுவே திடீரென 5 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரவுநேரத்தில் வாகனங்கள் ஏதும் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பள்ளத்தை சுற்றி இரும்பு பேரிகார்டுகளை வைத்து பாதுகாப்பு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று தேசிய நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்தனர். பின்னர் தற்காலிகமாக பள்ளத்தை சீரமைத்தனர். செந் தண்ணீர்புரம் பால பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் அங்கு தொடர் ஆய்வு செய்து வருகிறார்கள். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த பகுதி மிகவும் முக் கிய போக்குவரத்து வழித்தடம் என்பதால் தற்போது பாலத்தில் பள்ளம் மூடப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்கு பின்னர் சாலையின் தரத்தை ஆய்வு செய்தபிறகு அதில் தார்ச்சாலை போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News