பேராவூரணியில் காவல்துறை அதிரடி... சாலையோரம் எல்லைக்கோட்டுக்கு வெளியே வாகனத்தை நிறுத்தியதற்கு ரூ.5 ஆயிரம் அபராதம், பொதுமக்கள் பீதி

அபராதம்;

Update: 2025-07-15 02:49 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், காவல்துறையினர் சாலையோரம் எல்லைக்கோட்டை தாண்டி நிறுத்தும் வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  பேராவூரணியின் முக்கிய கடை வீதி பட்டுக்கோட்டை சாலையில் தொடங்கி அறந்தாங்கி சாலையில் முடிவடைகிறது. தஞ்சை மாவட்டத்திலேயே இல்லாத அளவிற்கு பேராவூரணி கடைவீதி சாலை மிக அகலமானது.  அகலமான சாலையோரங்களில் உள்ள நூற்றாண்டு பழமையான மரங்கள் வெட்டப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.  கடைவீதியில் இருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் உள்ள ஐறூறுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி உள்ளிட்ட வாகனங்களில் தான் பெரும்பாலும்  வருகின்றனர். வாகனங்களை கடைகளுக்கு முன்பாக நிறுத்திவிட்டு இத்தனை நாட்களாக பொருட்கள் வாங்கி சென்று கொண்டிருந்தனர். கடந்த சில நாட்களாக பேராவூரணி காவல்துறையினர் வாகனம் நிறுத்துவதற்காக கடைகளுக்கு முன்பாக நெடுஞ்சாலை துறையினரால் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோட்டிற்கு வெளியே வாகனங்களின் பின்பகுதி சிறிது வெளியே நின்றாலும் அபராதம் விதித்து விட்டு சென்று விடுகின்றனர்.  நேற்று மாலை அம்மையாண்டி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பள்ளிவாசல் அருகில் உள்ள டீக்கடை முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மோட்டார் சைக்கிளின் பின்பகுதி வெள்ளைக்கோட்டுக்கு வெளியே சிறிது இருந்தது. அங்கு வந்த காவலர் ஒருவர்  கையில் வைத்திருந்த கருவியில் எல்லை தாண்டி நின்றதற்காக அபராதம் என பிரின்ட் பேப்பரை கையில் கொடுத்து விட்டு சென்று விட்டார்.  பேப்பரை வாங்கி பார்த்த ராமலிங்கத்திற்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.இதேபோல் பல இடங்களில் அபராதம் விதிக்கப்படுவதால் கடைவீதிக்கு வாகனங்களில் வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் கடைவீதி வியாபாரிகள் பொதுமக்கள் வரத்து குறைவால் வியாபாரம் இல்லை என புலம்புகின்றனர்.  நீலகண்ட பிள்ளையார் கோயிலில் முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறும். திருமணத்திற்கு வாகனங்களில் வரும் ஆயிரக்கணக்கானோர் கூட்ட நெரிசலில் சிக்கி கலைந்து போக பலமணி நேரங்கள் கூட ஆகியதுண்டு.  அப்போதெல்லாம் எந்த காவல்துறையினரும் வந்து நெரிசலை ஒழுங்குபடுத்தியதில்லை, பொதுமக்கள் தாங்களாகவே பல ஆண்டுகளாக நெரிசலில் சிக்கி கலைந்து சென்று கொண்டிருக்கின்றனர். கூட்டமான நேரங்களில் கடைவீதியில், கோயிலில்  நின்று போக்குவரத்தை சரிசெய்து பொதுமக்களுக்கு சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தாமல், இது போல திடீரென அதிரடியாக அபராதம் விதிப்பதால் காவல்துறையினர் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Similar News