ஆரணி நகரமன்ற கூட்டத்தில் சுமார் ரூ.50லட்சத்திற்கான வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றம்
ஆரணி, ஆக 30. ஆரணி நகராட்சியில் நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் ரூ.50லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
ஆரணி நகராட்சியில் நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். ஆணையாளர் சரவணன், துணைத்தலைவர் பாரி பி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்தில் ஆரணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளிகள் மற்றும் நகராட்சி பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளவும் ஒரு துப்புரவு பணி மேற்பார்வையாளர் மற்றும் 16 தூய்மை பணியாளர்களைக்கொண்டு பணி மேற்கொள்ள ரூ.30லட்சம் நகராட்சி கல்வி நிதியிலிருந்து மேற்கொள்ளவும், ஆரணி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், நீதிமன்ற வளாகம், மருத்துவமனை வளாகம் மற்றும் சாலையோரங்களில் மழை காலங்களில் புல், பூண்டு செடிகள் வளர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் இதனை அகற்றும் பணி மேற்கொள்ள 4 புல் வெட்டும் இயந்திரம், செடிகள் நட மண் தோண்ட குழிவெட்டும் இயந்திரம் 2 வாங்கிடவும் ரூ.3லட்சம் ஒதுக்கவும் உள்ளிட்ட சுமார் 50 லட்சத்திற்கான வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மன்ற விவாதத்தில் 2வது வார்டு கவுன்சிலர் தேவராஜ் என்பவர் அவரது வார்டில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை என்றும் உடனடியாக குப்பை வண்டியை அனுப்புமாறும் கூறினார். 5வது வார்டு கவுன்சிலர் சுதாகுமார் என்பவர் ஆரணிப்பாளையம் சத்யா நகர் பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் மழை காலங்களில் கழிவு தேங்கி வீட்டினுள் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது ஆகையால் உடனடியாக கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால். இதற்கு ஆணையாளர் கட்டிதத்ரப்படும் என்று கூறினார். கவுன்சிலர் அரவிந்த் என்பவர் குடிநீர் மினிடேங்கினை சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் கவுன்சிலர்கள் பாபு, சுப்பிரமணியன், மோகன் உள்ளிட்டோர் குப்பைகளை தினமும் வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். பின்னர் கூட்டம் முடிந்தது.