சேலம் அருகே ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் கொள்ளை
போலீசார் விசாரணை;
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் வரட்டேரிகாடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 64). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி செண்பகவடிவு. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். வெங்கடாசலம் தனது மனைவியுடன் கடந்த 28-ந்்் தேதி வீட்டை பூட்டி விட்டு நாமக்கல் மாவட்டம் கருப்பட்டி பாளையத்தில் உள்ள உறவினர் திருமணத்துக்கு சென்றார். நேற்று வெங்கடாசலம் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடப்பது தெரிந்தது. பின்னர் பீரோவை பார்த்த போது அதில் அவருடைய நகைகள் மற்றும் உறவினர்கள் நகை என மொத்தம் 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வெங்கடாசலம் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வெங்கடாசலத்திடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த மர்ம கும்பல் குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். கொள்ளை குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மகும்பல் அரங்கேற்றிய இந்த துணிகர சம்பவம் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.