தாராபுரம்:வழக்கறிஞர் முருகானந்தம் கொலை – 6 பேர் கைது, போலீசார் அதிரடி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2025-07-30 15:04 GMT
தாராபுரத்தில் உள்ள "தேன்மலர் மெட்ரிகுலேஷன் பள்ளி"யின் உரிமையாளர் தண்டபாணிக்கும், அவரது அண்ணனின் மகனான வழக்கறிஞர் முருகானந்தத்திற்கும் நீண்ட நாட்களாக சொத்து தொடர்பான மோதல் இருந்து வந்தது. முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். தேன்மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி கட்டிடம் சட்டப்படி அனுமதி அனுமதி பெறாமல் தரைத்தளத்தில் இருந்து நான்கு தளம் வரை கட்டிடம் கட்டப்பட்டு அதில் மாணவர்கள் படித்து வந்தனர். இந்த நிலையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட மூன்றாவது மாடி கட்டிடத்தை இடிக்கும்படி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் வழக்கு தொடர்ந்து அதில் நீதிமன்ற உத்தரவுபடி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தேன்மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாவது தளம் இடிக்கப்பட்டது. இதனால் தண்டபாணியின் அண்ணன் லிங்கசாமியின் மகன் முருகானந்தத்திற்கும் தண்டபாணிக்கும் சொத்து சம்பந்தமாக பிரச்சனைகள் இருந்து வந்தன. மேலும் முருகானந்தம் அப்பா லிங்கசாமிக்கு சொந்தமான இடம் தேன்மலர் பள்ளியின் அருகே இருந்தது அதனை நில அளவை செய்ய, முருகானந்தம் நேற்று தாராபுரத்திற்கு வந்திருந்தார். அவருடன் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரகுராம், கோவையைச் சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரும் சென்றிருந்தனர். திடீர் தாக்குதல் – வழக்கறிஞர் படுகொலை: தேன் மலர் பள்ளிக்கு சென்ற மூவரையும், அங்கிருந்த பள்ளி உரிமையாளர் தண்டபாணி மற்றும் கூலிப்படையினர் தாக்கினர். இந்தத் தாக்குதலில் முருகானந்தம் அரிவாளால் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க முயன்ற மற்ற இரண்டு வழக்கறிஞர்கள் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் கைது – நீதிமன்ற காவல்: இந்த கொலை சம்பவம் தொடர்பாக, தண்டபாணி மற்றும் கூலிப்படையினராக இருந்த தட்சிணாமூர்த்தி (29), ராம் (22), சுந்தரன் (26), நாகராஜன் (29), நாட்டுதுரை (65) ஆகியோர் தாராபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி, தாராபுரம் அரசு மருத்துவமனையில் உடல்நலம் பரிசோதித்து, பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில், காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் விஜயசாரதி அவர்களை நீதிமன்ற முகாம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீதிபதி உமா மகேஸ்வரி அவர்களிடம் குற்றவாளிகளை ஒப்படைத்தனர் அதன் பிறகு நீதிபதி உமா மகேஸ்வரி குற்றவாளிகளுக்கு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். விசாரணையின் அதிரடி: இந்த கொலை நடந்த அதே நாளில் குற்றவாளிகளை கைது செய்து, சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ள தாராபுரம் காவல்துறையின் வேகமான செயல்பாடு பாராட்டை பெற்றுள்ளது.

Similar News