உக்கிரமாகாளி கோவில் திருவிழாவில் பேனர் வைப்பதில் பிரச்சனை: 68 பேர் மீது வழக்கு
திருச்சியில் உக்கிரமாகாளி கோவில் திருவிழாவில் பேனர் வைப்பதில் பிரச்சனை:- பாஜகவினர் 5 பேர் கைது, 68 பேர் மீது வழக்கு;
திருச்சி, தென்னூர் உக்கிரமாகாளி அம்மன் கோவில் திருவிழா மார்ச் 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 3-ம் தேதி தேரோட்டம், குட்டி குடித்தல் ஆகியவை நடைபெறுகிறது. ஏப்ரல் 6 ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. குட்டி குடித்தல் நிகழ்ச்சி தென்னூர் மந்தையில் நடைபெறும். கோவில் திருவிழாவை முன்னிட்டு தென்னூர் மந்தையில் ஒரு தரப்பினர் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக நேற்று( மார்ச் 12) இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தென்னூர் பகுதியில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து பாஜகவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். மேலும், இருதரப்பைச் சேர்ந்த 68 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்