சேலத்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்த வழக்கு
முதியவருக்கு 1¼ ஆண்டு ஜெயில்;
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வாழப்பாடியை சேர்ந்த சின்னபொன்னு என்ற பெண்ணிடம் 7 பவுன் நகை மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை நூதன முறையில் முதியவர் ஒருவர் பறித்தார். இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சின்னபொன்னுவிடம் நகை, செல்போன் பறித்தது தொடர்பாக மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது மீரான் (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூற்ப்பட்டது. இதில் பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக முகமது மீரானுக்கு 1¼ ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு முத்துகிருஷ்ண முரளிதாஸ் தீர்ப்பு அளித்தார்.