குமரி மாவட்டம் தக்கலை அருகேசரல் விளைப் பகுதி சேர்ந்தவர் அபுல் கலாம் ஆசாத் (48) இவரது மகள் ஷர்மிளா (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காலித் என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதியினருக்கு 7 மாதத்தில் ஹைரா என்ற பெண் குழந்தை உள்ளது. காலித் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஷர்மிளா குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷர்மிளா தனது குழந்தை ஹைரா உடன் தக்கலை அருகே குளத்தில் குதித்து இறந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷர்மிளா, ஹைரா உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இது தொடர்பாக ஷர்மிளாவின் தந்தை அப்துல் கலாம் ஆசாத் தக்கலை போலீசில் புகார் அளித்தார். புகாரில் ஷர்மிளா இரவு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை அழுது கொண்டிருந்தது. இதனால் ஷர்மிளாவின் தாயார் கண்டித்துள்ளார். அப்போது திடீரென ஷர்மிளா நான் சாகப் போறேன் என்று கூறிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே சென்று உள்ளார். பின்னர் அருகில் உள்ள குளத்தில் குதித்து அவர் தற்கொலை செய்துள்ளார். அவரது சாவில் எந்த சந்தேகமும் இல்லை என புகாரில் கூறியிருந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.