ராமநாதபுரம் 72 நாட்களில் 163 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு படகையும் அதிலிருந்த 8 மீனவர்களை சிறை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை அட்டூழியம்

Update: 2024-08-27 03:15 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பின் மீனவர்கள் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். கடந்த வாரம் வடக்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசியதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சொல்லும் மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து நேற்று காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 430 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே நேற்று நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மரியசியா என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகையும் அதிலிருந்த மெக்கான்ஸ், கிங்ஸ்டன், மெக்கான்ஸ், சசி, அடிமை, மாரி, இன்னாசி ராஜா, முனியராஜ் உள்ளிட்ட 8 மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை மேற்கொண்ட இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள் விசாரணைக்கு பின் மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் இந்த ஆண்டு மீன் பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 72 நாட்களில் 163 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவே இந்திய அரசு இலங்கை அரசிடம் பேசி கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை நடத்தி மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும், இன்று சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News