குளத்தில் மீன் பிடிக்க சென்ற 8 வயது சிறுமி பலி

வேடசந்தூர் அருகே குளத்தில் மீன் பிடிக்க சென்ற 8 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Update: 2024-10-10 02:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் பிருந்தா அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பிருந்தா தனது தங்கை பாண்டீஸ்வரி என்பவர் உடன் அதே பகுதியில் உள்ள செம்மடை குளத்திற்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அப்போது அங்கே தேங்கி இருந்த தண்ணீரில் மீன் பிடிக்கும் ஆசையில் பிருந்தா குளத்தில் இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் பிருந்தா தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட பாண்டீஸ்வரி ஓடிச் சென்று தனது தந்தையிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த இளங்கோவன் மற்றும் ஊர் மக்கள் சென்று பார்த்த போது பிருந்தா தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் பிருந்தாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News