சேலத்தில் கடைகளில் குட்கா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-03-24 03:29 GMT
சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையில் போலீசார் கோர்ட்டு ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அப்போது குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அதன்படி ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர் சிவக்குமார் (வயது 50) என்பவரை கைது செய்தனர். அதேபோன்று கொண்டலாம்பட்டி போலீசார் சிவதாபுரம் பகுதியில் உள்ள கடையில் சோதனை நடத்தினர். அப்போது அதேபகுதியை சேர்ந்த பிரேமா (50) என்பவர் குட்கா விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கன்னங்குறிச்சி தாமரை நகர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு குட்கா விற்பனை செய்த கன்னங்குறிச்சியை சேர்ந்த ஆச்சார்யம் (61), மன்னார்பாளையத்தை சேர்ந்த பூங்கோதை (42) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று மன்னார்பாளையம் பகுதியில் உள்ள கடையில் வீராணம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குட்கா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராஜா (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். தாதகாப்பட்டியில் உள்ள பீடா கடையில் அன்னதானப்பட்டி போலீசார் சோதனை நடத்தினர். கடையில் குட்கா பதுக்கி விற்ற கோபாலகிருஷ்ணன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், ஆட்டையாம்பட்டி போலீசார் சேவம்பாளையம் பகுதியில் மளிகைக்கடையில் குட்கா விற்ற தனபால் என்பவரை ஆட்டையாம்பட்டி போலீசார் கைது செய்தனர். அதிகாரிப்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த பிரேமா (42) என்பவரை கைது செய்தனர். ஜாகீர் அம்மாபாளையத்தில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற பாஸ்கர் (63) என்பவரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Similar News