நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் தேங்காமல் செல்ல துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு நாமக்கல் MP மாதேஸ்வரன் அறிவுறுத்தல்!
பொதுமக்களின் நலன் கருதி நோய் தொற்றினை தடுக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில், கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்து, கழிவு நீர் தேங்காமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் !
நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில், சாக்கடைகளில் கழிவு நீர் தேங்காமல் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளுக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் MP அறிவுறுத்தினார். நாமக்கல் மாநகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. பல வார்டுகளில் ஏற்கனவே இருந்த கழிவுநீர் சாக்கடைக்கு பதிலாக மழைநீர் செல்லும் வகையில், புதியதாக பெரிய அளவில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. சரியான அளவீடு இல்லாமல் அமைக்கப்பட்டதால், புதியதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் சாக்கடை நீர் மற்றும் மழைநீர் முழுமையாக வெளியேறாமல் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் நகரின் பல இடங்களில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் பலரும் அவ்வப்போது சாக்கடைகளை சுத்தம் செய்ய, மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் நகரில், சேலம் மெயின் ரோட்டில் 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து அன்பு நகர் செல்லும் ரோட்டில் கழிவு நீர் கால்வாயில் நீர் செல்லாமல், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் நேரில் சென்று கழிவு நீர் கால்வாயை பார்வையிட்டார். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை செய்தார். பொதுமக்களின் நலன் கருதி நோய் தொற்றினை தடுக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில், கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து, கழிவு நீர் தேங்காமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆர்எஸ்ஆர் மணி, 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன், நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.