சிவகங்கை அருகே 100 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
சிவகங்கை அருகே 100 ஏக்கர் விளைநிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், வேளாண்துறை அதிகாரிகள் சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.
சிவகங்கை அருகேவுள்ளது இலுப்பகுடி கிராமம். இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக மேற்கொண்டுவரும் நிலையில் ஐப்பசிமாதம் பெய்த மழை நீர் கண்மாய்களில் இருப்பதை வைத்து இங்குள்ள விவசாயிகள் தங்களது 100 ஏக்கர் அளவிலான வயல்களில் உழவு பணிகளை துவங்கி விதைப்பு, நடவு, களையெடுத்தல், உரம் வைத்தல் என ஏக்கர் ஒன்றிற்கு ரூ 20 ஆயிரம் வரை செலவு செய்து தற்சமயம் பயிர் முளைவிட்டு அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக வயல்களில் தண்ணீர் ஏறி வடியாமல் நிரம்பியுள்ள சூழலில் அடித்த காற்றின் காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து சேதமாகியுள்ளது.
இதனை கண்ட விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ள நிலையில் அரசு முழுமையான கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்நிலையில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிரை வேளாண்துறை துனை இயக்குநர் வளர்மதி தலைமையிலான குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.