100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு
பூந்தமல்லியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு.
Update: 2024-03-22 17:21 GMT
நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப். 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி நேர்மையான முறையில் 100 சதவீத வாக்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கோலம் போடுதல், வாக்காளர்களிடம் கையெழுத்து பெறும் முகாம், மனிதசங்கிலி, செல்ஃபி பாயின்ட்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மாவட்ட வருவாய் அலுவலரும் துணை தேர்தல் அதிகாரியுமான ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தேர்தல் அதிகாரிகளான ஆர்டிஓ கற்பகம், பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ், பூந்தமல்லி நகராட்சி ஆணையர் லதா, பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து "என் வாக்கு, என் உரிமை" என்பதை வலியுறுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள், மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள், கையெழுத்திட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியம், பொதுமக்களின் உரிமை, நேர்மையான முறையில் வாக்களிப்பது உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.