10000 ச.அடி கட்டட மாடி நீர்க்கசியை சரி செய்து 10பெண்கள் உலக சாதனை
மயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழைமையான கட்டட மாடியில் 10 மணி நேரத்தில் 19,526 சதுரஅடி இடத்தில் நீர்க்கசிவு இல்லாமல் கோட்டிங் செய்து 10 பெண்கள் சாதனை:- ஏசியன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்தது
மயிலாடுதுறையில் பில்டிங் டாக்டர் என்ற கட்டுமான பழுதுநீக்கும் நிறுவனம் உலக சாதனை முயற்சியாக 10 பெண்களைக் கொண்டு, 10 மணி நேரத்தில் 10,000 சதுரஅடி கட்டடம் மாடியை நீர்க்கசிவு இல்லாமல் வாட்டர் புரூஃபிங் கோட்டிங் செய்ய திட்டமிட்டது. இதற்காக கிராமப்புறங்களில் கட்டட வேலை செய்யும் 10 பெண்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒருவாரம் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பெண்கள் மயிலாடுதுறையில் குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டு பழைமையான மாடிக்கட்டடத்தில் நீர்க்கசிவை சரிசெய்யும் பணியை காலை 6 மணிக்கு தொடங்கினர். பாசி படர்ந்திருந்த அந்த இடத்தை இயந்திரங்களின் உதவியுடன் நீர் மற்றும் காற்றை வேகமாக செலுத்தி சுத்தம் செய்தனர். தொடர்ந்து, குறிப்பிட்ட கால அளவான 10 மணி நேரத்துக்கு முன்னதாக 9.30 மணி நேரத்தில் கட்டடத்தின் முழு அளவான 19,526 சதுரஅடி இடத்திலும் அவர்கள் தங்கள் பணிகளை நிறைவு செய்தனர். இதனை ஏசியன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்தது. சாதனை படைத்த பெண் தொழிலாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்டு தமிழகத்தில் 45க்கு மேற்பட்ட கிளைகளை கொண்ட நிறுவனம் இது. கட்டுமானத்துறையில் பல்வேறு புதுமைகளையும் புரட்சிகளையும் செய்துள்ளது, கல்லூரி மாணவர்களது ப்ராஜெக்ட்டுக்கு உதவி செய்து வருதல்,கட்டுமான துறையில் தொழிலாளர்களின் பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி, கொரோனா காலகட்டத்தில் ,'வா பொறியாளா,' என்ற பெயரில் பொறியாளர்களுக்கான பாடலை உருவாக்கியது, கட்டிட கட்டுமான துறையில் பயன்படுத்தப்படும் கருவிகளைக் கொண்டு இசையை பயன்படுத்தி தேசிய கீதம் இசைத்தது உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது இந்நிறுவனம்.