10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

சேலத்தில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது.

Update: 2024-04-13 06:50 GMT

  சேலத்தில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது.  

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த 8-ந் தேதி முடிவடைந்தது. சேலம் மாவட்டத்தில் 43 ஆயிரம் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதையடுத்து விடைத்தாள்கள் மண்டல அளவிலான அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து மாவட்ட அளவில் விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையே 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர் பகுதிகளில் உள்ள 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 3 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முதன்மை தேர்வர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இன்று முதல் உதவி தேர்வர்கள், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர் என்று கூறினர்.

Tags:    

Similar News